செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கொங்கு மண்டலமே திமுக வசமானது எப்படி?

ந டந்து முடிந்த  உள்ளாட்சித் தேர்தலில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திமுக கூட்டணி மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. திமுகவின் சிறப்பான ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் இந்த அளவுக்கு பெரிய வெற்றி என்று ஆளுங்கட்சி தரப்பில் சொல்லப்படுகிறது.

கோவை மாநகராட்சியில் உள்ள 100-இல் 96 -வார்டுகளை திமுக கூட்டணியும், 3 வார்டுகளை அதிமுகவும், ஒரு வார்டை சுயேச்சையும் பெற்றுள்ளது, மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 நகராட்சிகளையும், பேரூராட்சிகளில் 33-இல் 31-யும் திமுக கூட்டணியே கைப்பற்றியிருக்கிறது. தவிர கோவை மண்டலத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம், ஒசூர் மாநகராட்சிகளும், 99 சதவீத நகராட்சி, பேரூராட்சிகளும் கூட திமுக வசமாகியிருக்கிறது.

கோவை மாவட்டத்தைப் பொருத்தவரை 8 மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாவட்டத்தில் 10-க்கு 10 தொகுதிகளை அதிமுகவே கைப்பற்றியிருந்த நிலையில் திமுகவிற்கு இப்போது இந்த வெற்றி சாத்தியமாகியிருப்பது அரசியல் நோக்கர்களின் புருவத்தை உயர்த்தி விவாதங்களை முடுக்கி விட்டிருக்கிறது.  

தெருவெங்கும் ஆளுங்கட்சியினரின் பணமும், அதிகார பலமும்தான் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், இதையும் தாண்டி இங்கே விளையாடின அரசியல் விளையாட்டுகள் சாதாரணமானதல்ல.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த திமுகவிற்கு கோவையில் கிடைத்த படுதோல்வி கௌரவப் பிரச்சனையாக இருந்து வந்தது. 1996-க்குப் பிறகு கோவையில் திமுக எந்த தேர்தலிலும் பெரியதாக சோபிக்கவில்லை. அதிலும் 2021 தேர்தலில் முழுமையான தோல்வி பெரிய ஆதங்கத்தை முதல்வர் ஆழ் மனதில் ஏற்படுத்தியிருந்தது. எனவேதான் பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாகவே பல முறை கோவைக்கு வருகை தந்தார். மக்கள் குறைகளை அலசி ஆராய்ந்தார். தம் கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசலையும், எதிர் கட்சியினருடன் சில புள்ளிகள் அரசியல் சிண்டிகேட் போட்டு விளையாடுவதையும் கண்டறிந்தார்.

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று கரூர் செந்தில் பாலாஜியை கோவைக்கு ஆட்சி மற்றும் கட்சி ரீதியாக பொறுப்பாளர் ஆக்கினார். செந்தில் பாலாஜி அதிமுகவிலிருந்து வந்தவர்; அதிமுக கோட்டையாக இருந்த கரூரை திமுக வசமாக்கியவர். கோவையில் உள்ள அதிமுக புள்ளிகள் அனைவரும் அவருக்கு நெருக்கம். கொங்கு மண்டலத்தில், குறிப்பாக கோவையில் அதிமுகவில் கோலோச்சும் முன்னாள் எஸ்.பி.வேலுமணிக்கு சமமாக அரசியல் சாதுர்யமும், பண பலமும் தொண்டர்கள் படையும் படைத்தவர்.

தான் பொறுப்புக்கு வந்ததும் கோவையில் ஒரு மாளிகையை வாடகைக்கு பிடித்து தங்கி, கரூரிலிருந்து தன் விசுவாசிகளை சுமார் ஆயிரம் பேரை கொண்டு வந்து அங்கங்கே தங்க வைத்து தீயாய் வேலை பார்த்தார்.

மாநகராட்சியில் மட்டுமல்ல, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டுகள் தோறும் மக்கள் குறை கேட்பு நிகழ்வுகளை நடத்தினார். உடனுக்குடன் தீர்க்கப்படக்கூடிய மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்தார்.   ஒவ்வொரு பகுதியிலும் உள்ளடி வேலை செய்யும் கட்சிக் காரர்களையும் கண்டறிந்து அவர்களை ஒதுக்கினார். கட்சி விசுவாசிகளை கண்டுபிடித்து அவர்களை வைத்து அதிமுக அமைத்திருப்பது போல் 100 வாக்காளர்களுக்கு ஒரு பூத் கமிட்டிகளை அமைத்தார். அதிமுக டீம் உள்ளாட்சித் தேர்தலில் பெரும் தொகை செலவழிக்க தயாராயிருப்பதை அறிந்து, அவர்கள் ஆயிரம் கொடுத்தால் நாம் இரண்டாயிரம், அவர்கள் இரண்டாயிரம் என்றால் நாம் மூவாயிரம் என்ற கணக்கின்படி கட்சியினருக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.   அதன் பின்னணியில்தான் கோவை திமுக இந்த முறை தேர்தலை எதிர் கொண்டது.

இது போல கோவை மண்டலம் முழுக்க பணம் விளையாடியிருக்கிறது. உதாரணமாக திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 37 சீட்டுகளை திமுக கூட்டணி கைப்பற்ற, 23 சீட்டுகளை அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் பிடித்துள்ளன. அதில் தலா 8 சீட்டுகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் முறையே 6 மற்றும் ஒரு தொகுதியில் வென்றிருக்கிறது. கம்யூனிஸ்ட்டுக்கு ஓரிடத்தில் மட்டுமே தோல்வி. மார்க்சிஸ்ட்டுகளுக்கோ 7 இடங்களில் தோல்வி.

இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், ‘இங்கே திமுகவில் அமைச்சர் சுவாமிநாதன் அணி, மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ் அணி, பத்மநாபன் அணி என்று மூன்று கோஷ்டிகள். அதில் ஒரு கோஷ்டியுடன் கைகோர்த்து மற்றவர்களை புறந் தள்ளினார்கள் அதில் நடந்த உள்ளடிதான் மார்க்சிஸ்ட்டுகளுக்கு மாபெரும் இந்த தோல்வி!‘ என்கின்றனர் உள்ளூர்காரர்கள்.

கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தை சேர்ந்த வே. ஈசுவரன், வாக்குக்கு பணம் புரண்டதை எதிர்த்து நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளார். அவரிடம் பேசினேன்.

‘‘ஆளுங்கட்சி கூட்டணிக்குத்தான் மக்கள் ஓட்டுப் போட்டனர் என்றால் திருப்பூரில் மட்டும் அக்கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட்டுகள் 8-க்கு 7-ல் ஏன் தோற்றார்கள். அவர்கள் மட்டும் கூட்டணித் தலைமையான திமுகவிடம் வாக்குக்கு பணம் வாங்க மறுத்ததோடு, தம் பெயரால் மற்றவர் பணப்பட்டுவாடா நடத்துவதையும் தடுத்து விட்டார்கள். அதுதான் அங்கே ஆளும் கூட்டணியில் மற்ற கட்சிகள் எல்லாம் பெருவெற்றி பெற்றிருக்க, மார்க்சிஸ்ட்டுகளுக்கு மட்டும் அந்த மாபெரும் தோல்வி. தமிழகத்திலேயே இல்லாத மாளாத பணம் புரண்டது கோவையில்தான் என்பதால், அதை புள்ளி விவரங்களோடு நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றேன். ‘வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டேன். அதில்தான் நீதிபதி, ‘ஓட்டு எண்ணிக்கை நடத்தலாம்; ஆனால் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழில், ‘தேர்தல் முடிவு இந்த வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது!' என்று குறிப்பிடும்படி சொல்லி உள்ளார்!' என்றார்.

 கோவை ராமநாதபுரத்தில் தம் மனைவியை நிறுத்தி வெற்றி வாய்ப்பை இழந்த பாஜக மண்டல் தலைவர் ஏ.டி.ராஜன் என்பவர் வித்தியாசமான ஒரு கருத்தை சொல்கிறார்:

‘பாஜக வசம் உள்ள கோவை தெற்குத் தொகுதிக்குள் 11 வார்டுகள் உள்ளன.இதில் போட்டியிட்ட பாஜக, அதிமுக  வேட்பாளர்கள்  பெற்ற வாக்குகளைப் பார்த்தால் 8 மாதங்களுக்கு முன்பு எங்க வானதி எம்.எல்.ஏ பெற்ற வாக்குகளுடன் ஒப்பிட்டால் 1,10,753 ஓட்டுகள் லாஸ். விழவில்லை. 8 மாதங்களுக்கு முன்பு இந்த எம்.எல்.ஏவுக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தோம். ஆனால் நம் பகுதிகளில் எந்த வேலையும் நடக்கவில்லை.  இவர்களுக்கு திரும்பவும் ஓட்டுப் போட்டால் நம் பகுதிக்கு சாக்கடை அள்ளக்கூட கார்ப்பரேசன்காரர்கள் வரமாட்டார்கள். எனவே ஆளுங்கட்சிக்குத்தான் ஓட்டுப் போட வேண்டும் என்று தீர்மானமாக நின்றிருக்கிறார்கள் மக்கள். கூடவே பணமும் வேலை செய்ய, அத்தனை ஓட்டுக்களையும் அள்ளிக் கொண்டார்கள்.'

ஆளுங்கட்சி வெற்றிக்கு பணம் மட்டுமே காரணமில்லை. பெண்களுக்கு பேருந்தில் இலவசப்பயணம் என்ற திட்டத்தால் அவர்களின் வாக்குகளும் கொத்தாக விழுந்துள்ளது என்ற கருத்தும் உள்ளது.

மார்ச், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com